இடைமுகம்

Rethinking Work-Life Harmony: Purpose, Value, and the Myth of Balance
March 14, 2024
Decision Fatigue – The Hidden Strain: Understanding Decision Fatigue and its Impact on Mental Well-being
August 21, 2024
Rethinking Work-Life Harmony: Purpose, Value, and the Myth of Balance
March 14, 2024
Decision Fatigue – The Hidden Strain: Understanding Decision Fatigue and its Impact on Mental Well-being
August 21, 2024

இக்கதையில் வரும் அனைத்தும் கற்பனையே. எதிர்காலத்தில் இப்படி இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே.

சிங்கப்பூர் அரசாங்கம் தடுப்பூசி போடுவது போல் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு சிப்பை பொருத்த முடிவு எடுத்திருந்தார்கள் . குழந்தைகளுக்கு மூன்று வயது ஆனதும் இதை பொருத்தலாம். இதை எதிர்த்து கேள்வி எழுப்பியர்வர்களுக்கு அரசாங்கம் கொடுத்த விளக்கம் – “வரும் முன் காப்போம்” என்பதே நம் இலக்கு, சுகாதார குறியீட்டுல் சிங்கப்பூரை அடுத்து கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியே இது. இதன்   மூலமாக நம் உடலில் நடக்கும் மாற்றங்களை கண்காணித்து தக்க சமையத்தில் இயற்கை வாழ்முறை மூலம் சிகிச்சையளிக்க எடுக்கும் முயற்சி தான் இது. இதுபோன்று உடம்பில் சிப்பை பொருத்துவது உலகத்தில் இதுவே  முதல் முறை. இதற்கு தொடக்கத்தில் தயக்கமும், எதிர்ப்பும் இருந்தாலும், இதன் பயன்பாட்டை மக்கள் அனுபவிக்க தொடங்கியதும் ஆதரவு பெருகியது. மருந்தும், ரோபோ மருத்துவர்களும் தானே வீடுகளுக்கு தேடி வந்து இலவச சிகிச்சை அளிப்பது பெரிதும் வரவேற்கப்பட்டது.

****

புதன்கிழமை இரவு பன்னிரண்டு மணி அளவில், என்றைக்கும் இல்லாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் காவலர்களும், காவல் ரோபோக்களும் ஊரை சூழ்ந்த வண்ணம் இருந்தனர். மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் இதைப்பற்றி  கேள்வி எழுப்ப தொடங்கினார்கள். பல வந்ததிகள் பரவ தொடங்கின. புதிதாக அரசியல் கட்சி தொடங்கின “லெக்ஸி” என்னும் ரோபோ ராணுவத்தில் வேலை செய்யும் சக ரோபோக்களை வைத்து அரசாங்கத்தை  கவிழ்க்க சதி என்றும் பேசி வந்தனர்.

இச்சூழலில் நாளை காலை பிரதமர் உங்களை சந்திப்பார். எந்த விதமான வந்ததிகளையும் நம்ப வேண்டாம் என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது.

*******

மறுநாள் அதிகாலையில் வெளியே வந்த மக்களை ரோபோ காவலர்கள் பிரதமர் பேசும் வரை யாரும் வெளியே வர கூடாது என்று கூறி அனுமதி மறுத்தனர். அன்று பொது விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது .

லேசான மழை தூறல்களில் சாலைகள் அமைதியாக காணப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மக்கள் மனதில் மட்டுமே இருந்தது, குழப்பமும், கூச்சலும், பதற்றமும் அங்கு நிலவினாலும், அந்த நீல நிற காவலர் உடையில் நின்று கொண்டிருந்த ரோபோட்களை அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை. 

ஆறு மணி ஆகிய நிலையில், அங்கு ஒரு சிவப்பு கூடாரம் கொண்டு வரப்பட்டது. அதை பெருசாக்க அதில் காற்றை செலுத்தினார்கள். சிறிது நேரத்துக்கு முன் தென்பட்ட சாலைகளை அந்த கூடாரம் முற்றும் ஆக்கிரமித்து இருவது அடி உயரத்திற்கு விஸ்வரூபம் பெற்றது. மக்கள் தனது HDB பால்கனியில் நின்று அதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சமூக ஆர்வலர்களும், போராளிகளும் வெளியே வந்து கேள்வி எழுப்ப தொடங்கினார்கள். ரோபோ காவலர்கள் தன்மையாக பிரதமர் உரை முடியும் வரை காத்திருக்கும் படி கேட்டுக்கொண்டார்கள். இதை கேட்க மறுத்தவர்களை அதே கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றார்கள். 

மணி ஏழு, பிரதமர் உரைக்கு இன்னும் ஒரு மணி நேரமே இருக்கிற நிலையில் அந்த சிவப்பு கூடாரத்தில் இருந்து திடீரென கருப்பு நிற பறவைகள் அங்கு பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மக்களை நோக்கி பறக்க தொடங்கியது. ஒரு சில கணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வானத்தை ஆக்கிரமித்தது. திடீரென சிவப்பு கூடாரத்தில் இருந்து லேசர் ஒளி விளக்கு அந்த பறவைகள் மீது பாய்ந்தது. முதலில் குருவி போல் தோற்றுவித்த அந்த பறவை இப்பொழுது கழுகாக மாறியது. பயத்தில் கூச்சலிட்டு மக்கள் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினார்கள் . மக்கள் அனைவரும் அவர் அவரின் வீட்டிற்குள் சென்று தாழ் போட்டுக் கொண்டனர், ஆனாலும் கூச்சல் குறைந்த பாடாக இல்லை.

தூறல்கள் பெரிதாகி மழையாக பிறப்பெடுத்தது. சூரியனையும் வீட்டிற்குள்ளே அடைத்து வைத்தது போல் கண்ணில் தென்பட வில்லை, காலை எட்டு மணி நெருங்கியும் சிங்கப்பூர் இருள் சூழ்ந்திருந்தது. இருள் சூழ்ந்த சிங்கப்பூரில் கருடன் விசாயின்றி விஜயம் செய்தது போல் இருந்தது.  

மறுபடியும் லேசர் வெளிச்சம் அந்த கழுகு ரோபோட்கள் மேல் பட தொடங்கியதும் அதன் வாயிலிருந்து பச்சை நிற புகை கிளம்பியது. மறுபடியும் மக்களிடம் ஒரு பெரிய கோஷம் கிளம்பியது, ஒரு சிலர் அழத் தொடங்கினார்கள், சில கெட்ட வார்த்தைகளும் அந்த புகையில் கலந்தது. மெதுவாக அந்த கழுகு ரோபோக்கள் மனித உருவெடுத்து அந்த புகை வழியாக எல்லாருடைய வீட்டிற்குள்ளும் நுழைந்தது. உள்ளே வந்த ரோபோக்கள் தன் கண்களிலிருந்து ஒளியை எழுப்பி அங்கிருந்த சுவற்றில் ஒரு வீடியோவை பிளே பண்ணியது. 

அரசாங்கம் சில வருடங்களுக்கு முன் டிஜிட்டல் நகரம் ஒன்றை அறிமுகப் படுத்தியது. இதில் ஒரு பகுதியாக வீட்டில் இருக்கும் எல்லா இயந்திரங்களும் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டது. படுக்கை முதல் அடுப்பு வரை வயர்லெஸில் இணைத்து உருவாக்கப்பட்டது. இந்த டிஜிட்டல் நகரம் மூலம், மனித எண்ணங்களையும், இயந்திரங்களையும்  இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. மற்றொரு பகுதியாக ஒரு மனிதனின் எண்ணங்களை வயர்லெஸ் மூலம் மற்றொருவருக்கு பகிரும் தொழில்நுட்பத்தையும் சோதனை செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. தன்னார்வலர்களை இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. சிங்கப்பூர் என்றும் பாதுகாப்பான நாடு என்பதால் நிறைய பேர் தானாக முன்வந்து இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றன்னர். இந்த டிஜிட்டல் நகரத்தில் தங்கிய அனைவருக்கும் அவர்கள் பின் கழுத்தில் ஒரு சிப் பொருத்தப்பட்டது.

இவர்கள் தான் விருப்பப்பட்டவர்களிடம் தன் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டது. இதற்க்கு ஒரு சிலர் மட்டும் ஒப்பு கொண்டிருந்தனர்.

******

மாறன் – சிங்கப்பூர் வாழ் தமிழர். தன் மனைவி கயலுடன் இதில் பங்கேற்றார். இவர் தன் மனைவியின் கட்டாயத்தில் தன் எண்ணங்களை அவருடன் பகிர விருப்பம் அளித்திருந்தார்.

“நண்பா, இங்க இடம் ரொம்ப நல்லா இருக்கு. மேல நீச்சல் குளத்துடன் ஒரு பார் இருக்கு, ஒரு பீர்?” என்று ரவி மாறனுக்கு வாட்ஸாப்ப் பண்ணினார்.

மாறன் என்ன சொல்றதுன்னு யோசித்தப்படி கயலை பார்த்தான். கயலிடம் கேட்கலாமா வேண்டாமா என்று  யோசித்து கொண்டு இருக்கும் போதே

“முடியாதுன்னு சொல்லிடுங்க, முதல்ல நாம இங்க பார்க்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு” ன்னு சொன்னா கயல்.

அய்யோ, தெரியா தனமா எண்ணங்களை பகிர்ந்துக்க ஒத்துக்கிட்டேன் போலையேன்னு யோசிச்சான் மாறன். சிரித்துக்கொண்டே அருகிலிருந்த சோபாவில் வந்து  உட்கார்ந்தால் கயல். 

தன்னோட எண்ணங்களை வைத்து அங்கு இருக்கும் இயந்திரங்களை இயக்குற ஆர்வத்தில், தொலைவில் இருந்த அவளோட கணினியின் பாஸ்வர்ட்டை போட நினைத்தால். டக் டக் என்று கணினி தானாக திறந்தது. நெட்ஃபிக்ஸை  

 திறக்க நினைத்தால், நெட்ஃபிக்ஸும்  திறந்தது.

மாறன் பக்கத்துல அமர்ந்தபடி கொஞ்சம் நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தான். 

“ஒ ஷிட்!!!” என்றால் கயல். அவளோட பாஸ்வர்ட் இப்போ மாறனுக்குத்  தெரியும். “மாறன்என்அன்பே420” என்று வைத்திருந்தால்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படி “டேஞ்சரஸ்”ன்னு சொல்லி சிரித்தார்கள். 

மாறன் இன்ஸ்டாகிராம்ல அவன் கூட வேலை செய்யற ரம்யா போட்டிருந்த ஃபோட்டோவ பார்த்துக் கொண்டிருந்தான். “போதும் சைட் அடிச்சது, அவ அவ்ளோலாம் ஒர்த் இல்ல” ன்னு சொன்னா கயல். 

“டாம் இட்!!!”ன்னு சொல்லி கைபேசியை கீழ வச்சிட்டு அங்கிருந்து ரூம்குள்ள போனான். கயல் உடனே மாறன் கைபேசியை எடுத்து ரம்யாவோட ஃபோட்டோவ பார்த்தா. மாறன் மறுபடியும் வெளியே வந்து “அவ்ளோ பொறாமையா”ன்னு கேட்டான் கயல் சிரித்துக் கொண்டே “போடா டேய்”ன்னு சொன்னா. ரெண்டு பேரும்  மறுபடியும் சிரித்தார்கள். 

கயல் பால்கனியில் வந்து நின்றாள், கீழ ஜோசப் அவன் அம்மா மேரிய சக்கர நாற்காலியில் வாக்கிங் கூட்டிட்டு போகிறத பார்த்தாள். திடீரென ஜோசப் அவனோட அம்மா முன் வந்து மண்டியிட்டு அழத் தொடங்கினான். அவனோட அம்மா ஒன்றும் பண்ணாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கு நடப்பது என்னவென்று புரியாத கயல், கீழ இறங்கி வந்து என்ன ஆச்சுன்னு விசாரிச்சா, ஏதாவது உதவி வேண்டுமான்னு கேட்டா. ஜோசப் நிமிர்ந்து பார்த்து, தன் கண்களை துடைத்துக் கொண்டு, இல்ல என் அம்மா அல்சைமர்ல பாதிக்க பட்டிருக்காங்க, அவங்களால சரியா பேச முடியாது, நினைக்கிறதை பண்ணவும் முடியாது, ஆனா இப்போ எங்க அம்மா, நான் அவங்க பிள்ளையாக பிறந்ததிற்கு எனக்கு நன்றி சொன்னாங்க, அவங்க  போன ஜென்மத்துல பண்ணின புண்ணியம்ன்னு சொன்னாங்க. இவ்ளோ நாளா நான் அவங்க தேவை என்னனு புரிஞ்சிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். நான் மட்டும்தான் பேசுவேன், அவங்க எனக்கு பதில் சொல்ல முடியாம கஷ்ட படுவாங்க. நான் என் கடமையை தான் செய்யுறேன், எங்க அம்மா என்ன நினைக்கறாங்கன்னு எனக்குத் தெரியுது, நான் என்ன நினைக்கறேன்னு அவங்களுக்குத் தெரியுது, இந்த சிப்பினால் குறைந்தபட்சம் அவங்க தேவையறிஞ்சு நான் அவங்களுக்கு சேவை செய்ய முடியும்ன்னு  நினைக்கிற போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொன்னாரு ஜோசப்.

இதை கேட்ட கயலுக்கு கண்ணுல தண்ணி வந்தது, எண்ணங்களை பரிமாறிப்பது பற்றி இருந்த சந்தேங்களுக்கு விடை கிடைச்ச மாதிரி இருந்தது.

*****

அன்றிரவு மாறனும் கயலும், ரவி கூட அங்கிருந்த பார்க்குக்கு போனாங்க. கயல் ரவிகிட்ட அவன் மனைவி பத்தி விசாரிச்சா. 

ரவி அவன் மனைவி கொஞ்சம் மன உளைச்சலில் இருக்கிறதாகவும், அதற்கு சென்னையில் சிகிச்சை எடுத்துட்டு வருவதாகவும் சொன்னான். 

அவங்க நம்பர் குடுங்க, நானும் ஒரு சைக்காட்ரிஸ்ட் தான். நானும் பேசி பார்க்கிறேன்னு சொன்னா கயல். 

ரவி மாறனை பார்த்துட்டு , சரின்னு தலையை  ஆட்டினான்.

சரி நான் கீழ போறேன், நீங்க பேசிட்டிருங்கன்னு சொல்லிட்டு கயல் கீழ போயிட்டா.

கொஞ்ச நேரம் கழித்து மாறன் கீழ வந்தான், கயல் ரவி மனைவியிடம் பேசிட்டிருந்தா, மாறன் போய் படுத்து தூங்கிட்டான்.

*****

மறுநாள் காலையில ரவிய மருத்துவமனைல சேர்த்திருக்காங்கனும், இரவு தன்னோட கையை  அறுத்து தற்கொலை பண்ண முயற்சி பண்ணிருக்கானும் , தக்க சமயத்துல போலீஸ் போய் காப்பாத்திருக்காங்கன்னும் தெரிய வந்தது.

போலீஸ் ரவி மனைவி  நந்தினியையும் தொடர்பு கொண்டு அவங்களை சிங்கப்பூர்க்கு வர சொல்லி கேட்டுக்கிட்டாங்க.

மாறனும் கயலும் தான் கடைசியா ரவியை சந்திச்சதுன்னு தெரிஞ்சதும், அவங்க எண்ணங்களை சேகரிச்சு வச்ச டேட்டாக்களை  போலீஸ் படிக்க ஒப்புதல் கேட்டாங்க. வேற வழி இல்லாம  கயலும் மாறனும் ஒப்புதல் கொடுத்தாங்க.

*****

மறுநாள் சாங்கி விமான நிலையத்திற்கு நந்தினியை கூட்டிச் செல்ல வந்திருந்தாள் கயல் .

போலீஸ் நந்தினியை விசாரிக்க அழைத்துச் சென்றார்கள். அங்கே நடந்த நிகழ்வுகளை விவரித்தார்கள்.

போலீஸ் கயலை பார்த்து, கயல், நீங்கள் நேற்று சந்தேகப்பட்டது சரிதான் . ரவி தான் நந்தினிக்கு “மைண்ட் வ்ராப்”ன்னு ஒரு மருந்து கொடுத்து இவங்கள  மன உளைச்சலுக்கு ஆளாக்கிருக்கிறான். நேற்று நீங்கள் இதை பற்றி நந்தினி கிட்ட சொன்னதும் இவங்க ரவிக்கு ஃபோன் பண்ணி சண்டை போட்ருக்காங்க. குடிபோதைல இருந்த ரவி என்ன பண்றதுன்னு தெரியாம தற்கொலை செய்ய முயற்ச்சி பண்ணிருக்காரு. ஆனா இது டிஜிட்டல் நகரம். இங்க உங்க மன அழுத்தம் தீவிரம்  அடையும் பொழுது போலீஸ்க்கு ஆட்டோமேட்டிக்கா எச்சரிக்கை வந்துவிடும். உங்கள் இருப்பிடமும் உடனே தெரிய வரும். அதனால் தான் ரவியை எங்களால் காப்பாற்ற முடிந்தது .

நந்தினி ,உங்களுக்கு அவர் மருந்து கொடுத்தது உங்களை மன உளைச்சலுக்கு உண்டாக்கனும் என்ற நோக்கத்தில் இல்ல . இந்த மருந்து கொடுத்தா உங்களை அவன் கட்டுப்பாட்டுல வச்சுக்கலாம்ன்னு யாரோ சொல்லிருக்காங்க.  இந்த மருந்தை சாதாரணமா வெளில வாங்க முடியாது. போலியான மருந்து சீட்டு உருவாக்கி  வாங்கி இருக்கிறார் .

யாரு இப்படி எல்லாம் யோசிக்கறாங்கன்னு நந்தினி கேட்டா .

போலீஸ் கயலை பார்த்தாங்க. கயல் பதில் சொல்லாமல் அந்த ஸ்டேஷன்ல இருந்த சிறையை பார்த்தா. அங்க மாறன் இருந்தான். மாறன் தான் கயலுக்கு தெரியாமல் கயல் அந்த மருந்தை பரிந்துரை செய்தா மாதிரி எழுதி கொடுத்து இருக்கிறான்.

***

பிரதமர் உரை இன்னும் சில நொடிகளில் என்று திரையில் வந்தது .

லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்,

முதலில் நேற்று இரவு நடந்த நிகழ்வுக்கும் இன்று காலையில் நடந்த நிகழ்வுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மனித நேயம் மேம்பட வேண்டும். சிங்கப்பூர் அசுர வளர்ச்சி அடைய வேண்டும் . இதற்காக அனைவரும் சிறிது தியாகம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கான பிரதிபலன் தக்க சமயத்தில் உங்களுக்கு வந்தடையும்.

உலகித்தில் இருக்கிற அனைத்து தகவல்களையும் ஒரு நொடியில் ப்ராசஸ் செய்து கொடுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிங்கப்பூர் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது . மனிதனின் மூளையையும், எண்ணங்களையும், உணர்வுகளையும் இயந்திரங்களோடு ஒன்றிணைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது . ஆம், மனிதனின் மனதையும், அறிவையும் கணினியோடையும் இயந்திரத்தோடையும் இணைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது .

இந்த விடியோவை பார்த்தீர்களா ? இது சித்திகரிக்கப்பட்டது இல்லை. உண்மையாக நடந்த கதை . உங்கள் பாதுகாப்பு மிகவும் அவசியம். உங்களுடைய எண்ணங்களை கணினி மயமாக்க போகிறோம். எண்ணங்கள் ராகியமாவை. அதனை காப்பாற்றுவது மிக அவசியம் என்று நாங்கள் நன்கு அறிவோம், அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் எடுத்திருக்கிறோம். உங்கள் அனுமதி இல்லாமல் அரசாங்கம் கூட உங்களுடைய டேட்டாக்கள பார்க்க முடியாது. ஆனால் உங்கள் உயிருக்கு ஒரு ஆபத்து, தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ,கொலை ,கொள்ளை என்ற மாதிரி எண்ணங்கள் தோன்றும் போது எங்களுக்குத் தெரிய வரும் . அப்பொழுது எங்களால் அதை தடுத்து நிறுத்த முடியும். 

வரும் முன் காப்போம்!!!

இன்று முதல் டிஜிட்டல் நகரத்தில் மட்டும் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம்  சிங்கப்பூர் முழுவதும் அமல்படுத்தப்படும் . சிறிது நேரம் முன்னர் ஒரு பச்சை நிற புகையை நாடு முழுக்க பரவ விட்டோம். அது வெறும் புகை இல்லை, செயற்கை மூலக்கூறுகள். இன்னும் அரை மணி நேரத்தில் காற்றோடு காற்றாக கலந்து விடும். அந்த மூலக்கூறுகள் தான் உங்கள் எண்ணங்களை மூளையில் இருந்து நீரோ ட்ரான்ஸ்மிட் செய்து கணினி கூடவும் மற்ற இயந்திரத்தோடவும்  இணைக்கும். உங்கள் எண்ணங்களை தகவல்களாக மாற்றி பதிவு செய்யும். 

தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்தும் , அதனால் மனிதர்களுடைய வெவ்வேறு தேவைகளை அறிந்து  பூர்த்தி செய்ய முடியவில்லை .மற்றவர் தேவை அறிந்து செய்யக்கூடிய திறன் மனிதர்களிடம் மட்டுமே உள்ளது. அதே போல் இயந்திரம் தகவல்களை வேகமாக ப்ராசஸ் செய்யுற மாதிரி மனிதர்களால் முடியாது. செயற்கை நுண்ணறிவு நமக்கு துணைபுரிந்த  காலம் முடிந்தது. இனி நாம் செயற்கை நுண்ணறிவுடன்  ஒருங்கிணைய வேண்டும். செயற்கை நுண்ணறிவுக்கும் இயற்கை நுண்ணறிவுக்கும் ஒரு இடைமுகத்தை அறிமுக படுத்துகிறோம்.

சிங்கப்பூர் இந்த உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க இது மிகப்பெரிய வாய்ப்பு. 

இன்னும் சிறிது நேரத்தில் எல்லாரும் மயக்கம் அடைவீர்கள். ஒரு அரை மணி நேரத்திற்கு எல்லாரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பீர்கள். உங்கள் ஃபோனில் மென்பொருளை மேம்படுத்துவது போல் மனித நேயம் மேம்படுத்தப்படும்.

வரும் முன் காப்போம் – Prevent And Prevail.

முற்றும்

இக்கதையில் வரும் அனைத்தும் கற்பனையே. எதிர்காலத்தில் இப்படி இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே.



வரும் முன் காப்யபாம் – Prevent And Prevail.


முற்றும்


இக்கடையில் வரும் அடைத்தும் கற்படையய. எைிர்காலத்ைில் இப்படி இருந்ைால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *